வெட்கத்தை மாற்றும் ஆண்டவர்

பயப்படாதே, நீ வெட்கப்படுவதில்லை; நாணாதே, நீ இலச்சையடைவதில்லைஏசாயா54:4

                         ஆண்டவரின் நாமத்தில் வாழ்த்துக்கள்..  ஆறு மாதங்களை அற்புதமாய் கடந்து வந்திருக்கிறோம்.. திரும்பிப் பார்த்தால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம். தேவனுடைய நடத்துதல்கள் எப்போதுமே அற்புதமே. போன மாதங்களில் நடத்தினவர் வருகிற நாட்களிலும் நடத்துவார் என்ற விசுவாசத்தோடு முன்னேறுவோம்.

                   இந்த மாதத்துக்கான ஒரு வார்த்தையை காண்போம். ஏசாயா 54 ஆம் அதிகாரம் 4 வது வார்த்தை இப்படி சொல்லுகிறது.. பயப்படாதே, நீ வெட்கப்படுவதில்லை; நாணாதே, நீ இலச்சையடைவதில்லை” இந்த வசனத்தை மேலோட்டமாய் வாசித்தால் இது முற்றிலும் இஸ்ரவேலருக்கு சொல்லப்பட்டது.. இந்த வசனத்தின் பின்னணியை கவனித்தால் அது வித்தியாசமான அர்த்தத்தை நமக்கு சொல்லுகிறது.

                   இஸ்ரவேலின் அன்றைய நிலைமை மிகுந்த பரிதாபத்துக்கு உரியதாயிருந்தது. அந்த அதிகாரத்தில் இஸ்ரவேல் நாட்டை தேவன் சொல்லி அழைக்கும்  சில வார்த்தைகளை நான் குறிப்பிடுகிறேன் கவனியுங்கள்.

1) பிள்ளை பெறாத மலடி                     2) அநாத ஸ்திரீ ( வசனம் 1).  

3) வாலிபத்தின் வெட்கம்                  4) விதவையிருப்பின் நிந்தை  ( வசனம் 4).    

5) கைவிடப்பட்ட ஸ்திரீ               6) மனம் நொந்த ஸ்திரீ ( வசனம் 6).

                   இந்த வார்த்தைகள் எதுவுமே சந்தோஷம் தருகிற வார்த்தைகள் இல்லை. இஸ்ரவேலரின் நிலைமை இப்படித்தான் இருந்தது.

                                      தேவன் தம்மை ஒரு கணவனைப் போலவும் இஸ்ரவேலை ஒரு மனைவியின் ஸ்தானத்திலும் வைத்து பார்க்கும்போது, இஸ்ரவேலிடத்தில் ஒரு நன்மையையும் காணவில்லை. ஆனால் இஸ்ரவேலுக்கு இதைப் பற்றியை எந்த பார்வையும் இல்லை, எண்ணமும் இல்லை. அவர்கள் தேவனை தேவைக்காகமட்டுமே தேடிய ஜனமாக இருந்தார்கள். தேவனைத் தேடவில்லை, அவரை தன் நேசராக(கணவனாக) அறியவில்லை, தன்னுடைய தவறான நடக்கைகள் அவரைக் காயப்படுத்தும்அல்லது ஏமாற்றும் என்ற அறிவில்லை, அவர் மாத்திரமே தன்னுடைய எல்லா உயர்வுக்கும், நன்மைகளுக்கும் காரணர் என்ற உணர்வில்லை. இந்த நிலைமையில்தான் அவர் இந்த வார்த்தைகளைத் தருகிறார்.

                                      இஸ்ரவேல் தேசம் தேவனைவிட்டு தூரப்பட்ட படியினாலேயே இப்படிப்பட்ட நிலைமை என்று அறிந்த தேவன், அதினால் அவர்கள் அதிக வெட்கத்தை அனுபவிக்கிறார்கள் என்று அறிந்த தேவன் அவர்களுக்கு இந்த வாக்குத்தத்தத்தை கொடுக்கிறார். “ நீ வெட்கப்படுவதில்லை. “.ஒருவேளை இதை வாசிக்கிற அன்பு சகோதரனே , அன்பு சகோதரியே நீங்களும் அதிக வெட்கத்தை அவமானத்தை அனுபவிக்கிறீர்களா? அது உங்களால் தாங்க முடியாத சுமையாக இருக்கிறதா?. ஆண்டவர் இன்று உங்களை பார்த்தும் சொல்லுகிறார். நீ வெட்கப்படுவதில்லை.

                                      முதலாவது நம்முடைய வெட்கம் அல்லது அவமானம் எதினால் வந்தது என்று கவனித்துப் பார்ப்பது நல்லது. தேவனை விட்டு தூர செல்லும்போதோ அல்லது தேவன் நமக்கென்று வைத்திருக்கும் அவரின் சித்தத்தை விட்டு விலகும்போதோ அவமானங்கள் ஏற்படுகிறது. நாம் தேவனோடு இருக்கிறோம் என்றுதான் நினைத்துக் கொண்டிருப்போம், ஆனால் அவர் நமக்கென்று வைத்திருக்கும் திட்டத்தை விட்டு வேறெதையோ செய்து கோண்டிருப்போம். இஸ்ரவேலர் தேவனோடிருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் தேவன் நீ என்னோடிருக்கவில்லை, உன் நேசரை விட்டு தூரம்போன ஸ்திரீயைப் போலிருக்கிறாய் என்று சொன்னார். “நம்முடைய நினைவுகள் அவர் நினைவு அல்ல”.

இஸ்ரவேலர் எதிலெல்லாம் அவமானத்தை/வெட்கத்தை சந்தித்தார்கள்? 

  1. நெருக்கம் / விசாலமில்லை அல்லது எதிர்பார்த்த பெருக்கம் இல்லை      ( வசனம் 2 , 3)
  2. கைவிடப்பட்ட நிலைமை / உதவியற்ற நிலை ( வசனம் 7)
  3. நிற்க கூட முடியாத அளவுக்கு வெள்ளங்கள் புரளும் நிலை ( வசனம் 9)
  4. சிறுமை / பெருங்காற்றில் சிக்கிக் கொண்ட நிலை/ தேற்றுவார் யாருமில்லாத நிலை ( வசனம் 11)
  5. பிள்ளைகளால் வரும் நெருக்கம்/ சமாதானமற்ற நிலை ( வசனம் 13)
  6. கொடுமை / பயம் / திகில்
  7. விரோதமாய் வருகிற கூட்டம் ( வசனம் 15)/  விரோதமாய் எழும்பும் ஆயுதம், நாவுகள் ( வசனம் 17)

               ஒருவேளை நீங்களும் இவைகளுள் ஏதாவது ஒன்றில் வெட்கத்தை சந்தித்துக் கொண்டிருக்கலாம். வெற்றியே வர வழி தெரியாமல் குழம்பிப் போய் நிற்கலாம். அல்லது இதுதான் என் தலைவிதி என்று தீர்மானித்து திகைத்துவ்போய் நிற்கலாம். உங்களை உற்சாகப்படுத்தும் சில குறிப்புகளை சொல்லி முடிக்கிறேன். 

இப்படிப் போன்ற நிர்ப்பாக்கிய நிலைமையிலிருந்த மக்களைத் தான் தேவன் பேசி திடப்படுத்துகிறார்.  இஸ்ரவேலருக்கான ஆலோசனைகளை காண்போம்.

1.    தேவனை உன் நாயகராக அங்கீகரி/ அவரே உன் நேசர் / அவரே உன் மணவாளரன். அவர் இல்லாமல் நமக்கு ஒரு வாழ்க்கை இல்லை.  (வசனம் 5)

தேவைக்காக மாத்திரம் தேடப்படுகிறவர் அல்ல. அவரே நம் வாழ்வின் முக்கியமான நபர் /  கதாநாயகர். தேவையின் போது மாத்திரமல்ல வாழ்வின் எல்லா நேரங்களிலும் அவரையே அண்டிக்கொள்ளுவோம்.

2.    அவருடைய கிருபையே உனக்கு எல்லாவற்றையும் தந்தது என்பதை அங்கீகரி.  ஆசீர்வாதத்தின் பின் ஓடாமல் அதை நம்க்கு தந்த கிருபையை நாடித் தேடு.  ( வசனம் 8)

இஸ்ரவேலரின் அன்றைய சூழ்நிலையை வரிசையாகப் பார்த்தோம். அப்படி போன்ற மோசமான சூழ்நிலையிலும் அவர்களுக்கு நன்மைகளை தேவன் தர ஆயத்தமாய் இருந்தாரென்றால் அது அவருடைய கிருபையே.

இன்றைய கிறிஸ்தவத்தின் மிகப்பெரிய பிரச்சனை இதுதான். ஆசீர்வாதங்கள் அல்ல. அவரின் கிருபையே நம்மை கவர்ந்து கொள்ள வேண்டும்

3.     அவரை கொண்டாடு அல்லது அவரில் மகிழ்ந்து பாடு. (வசனம் 1)  உலகப் பொருட்களிலும் , உறவுகளிலும் சந்தோஷம் காண்பதைவிட அவரிடத்தில் நம் மகிழ்ச்சி இருக்கவேண்டும். அவரை, அவரின் பெயர்களை / நாமங்களைக் கூறி ஆராதிப்பது, பெற்றுக் கொண்ட நன்மைகளுக்கும் நன்றி  சொல்லி ஆராதிப்பது அவசியம்.

இன்று ஜெபிப்பதைவிட, வேதம் வாசிப்பதைவிட, அவரை    ஆராதிப்பதைவிட, சபைக்கு வருவதை விட மற்ற உலகக் காரியங்களும் , உலக உறவுகளும், உலக பழக்கங்களும் , உலகப் பொருட்களும் கிறிஸ்தவர்களை ஈர்க்கின்றது.  உங்களுடைய வாழ்க்கையில் இப்படிப்பட்ட சூழ்நிலைகளை கவனித்து மாற்றிவிடுங்கள், ஆசீர்வாதமாயிருப்பீர்கள்..

இவைகளை கவனித்து சரிசெய்து கொள்ளுங்கள். அவரின் அளவில்லாத, மாறாத , நித்திய கிருபை நம் வெட்கத்தையெல்லாம் அகற்றி வெட்கப்பட்ட அதே இடத்தில் நம்மை தலை நிமிர்ந்து நிற்கச் செய்யும்.

சங்கீதம் 3 : 3 இப்படி சொல்லுகிறது..” ஆனாலும் கர்த்தாவே, நீர் என் கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்.”

தந்தை பெர்க்மான்ஸ் அவர்களோடு சேர்ந்து நாமும் பாடலாமா..”

ஆசையெல்லாம் நீர்தானையா,

தேவையெல்லாம் நீர்தானையா..

இரட்சகரே இயேசு நாதா

தேவையெல்லாம் நீர்தானே”..

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!!!!!.

About the author

Ps. Ruban Charlas

The founder Pastor.J.Ruban charlas hails from a very humble family with strong Christian ethics. As he was yet comprehended God’s call on his life, through a supernatural physical miracle God revealed His heavenly call and confirmed it through many signs. After training of leaders and establishing more than 25 churches in the unreached areas, by the specific guidance from the Lord, he pioneered “Adonai New Life Worship Centre” in the southern part of Chennai the headquarters of Tamil Nadu, India

View all posts

2 Comments

  • Amen. Glory to God. Thanks Pastor your God’s word & Testimony. As per message we will follow. Surely we never shame. Please pray us for sustain. We also praying your Ministry and family. God bless you abundantly..